¹³ பாருங்கள், என் ஊழியன் ஞானமாய் செயலாற்றுவார்; அவர் எழுப்பப்பட்டு, உயர்த்தப்பட்டு, அதிக மேன்மைப்படுத்தப்படுவார். ¹⁴ அவரைக்கண்டு பிரமிப்படைந்தவர்கள் அநேகர்; அவரது தோற்றம் மனிதர் போலன்றி உருக்குலைந்ததாய் இருந்தது; அவரது சாயலும் மனிதர் போலன்றி சிதைக்கப்பட்டிருந்தது. ¹⁵ அநேக நாடுகள் அவரைக்கண்டு திகைப்பார்கள்; அவரின் நிமித்தம் அரசர்களும் தங்கள் வாய்களை மூடிக்கொள்வார்கள். அவர்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பார்கள், அவர்கள் கேள்விப்படாததை அவர்கள் விளங்கிக்கொள்வார்கள். ¹ எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்? யெகோவாவின் கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? ² யெகோவாவுக்கு முன்பாக அவர் ஒரு இளந்தளிரைப் போலவும், வறண்ட நிலத்தில் வளரும் வேரைப் போலவும் வளர்ந்தார். நம்மைக் கவரக்கூடிய அழகோ, மாட்சிமையோ அவரிடம் இருக்கவில்லை; அவருடைய தோற்றத்தில் நாம் விரும்பத்தக்க எதுவும் அவரில் காணப்படவில்லை. ³ அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்; அவர் துன்பத்தின் மனிதனாய் வேதனையில் பங்குகொண்டவராய் இருந்தார். அருவருப்புள்ள ஒருவனைக் கண்டு மனிதர் தம் முகத்தை மறைத்துக்கொள்வதுபோல், அவர் இகழப்பட்டார், நாமும் அவரை மதிக்கவில்லை. ⁴ உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார். அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு, அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம். ⁵ ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார், எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது, அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம். ⁶ நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்; நம்முடைய சொந்த வழிக்கே திரும்பினோம். யெகோவாவோ நம் எல்லோருடைய அநியாயத்தையும் அவர்மேல் சுமத்தினார். ⁷ அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார், அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை; அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும், மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும் அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். ⁸ ஒடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பின்றி அவர் கொண்டுசெல்லப்பட்டார். அவரது தலைமுறையினரைக் குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்? ஏனெனில் ஜீவனுள்ளோரின் நாட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்; எனது மக்களின் மீறுதல்களுக்காக அவர் வாதிக்கப்பட்டார். ⁹ அவரிடம் வன்முறை எதுவும் இருந்ததில்லை, அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை. ஆனாலும் கொடியவர்களோடு அவருக்கு ஒரு கல்லறை நியமிக்கப்பட்டது; தம் மரணத்தில் செல்வந்தரோடு அவர் இருந்தார். ¹⁰ ஆயினும் அவரை நொறுக்கி, வேதனைக்கு உள்ளாக்குவதே யெகோவாவின் திட்டமாய் இருந்தது, அவர் தமது உயிரைக் குற்றநிவாரண பலியாக ஆக்கியிருக்கிற போதிலும், அவர் நீடித்த நாட்களாய் இருந்து, தம் சந்ததியைக் காண்பார். யெகோவாவினுடைய திட்டம் அவரது கரத்தால் நிறைவேறும். ¹¹ அவரின் ஆத்துமா வேதனையடைந்தபின் அவர் வாழ்வின் ஒளியைக் கண்டு திருப்தியடைவார்; நீதியுள்ள எனது ஊழியன் தமது அறிவினால் அநேகரை நீதியானவர்களாக்குவார், அவர்களுடைய அநியாயச் செயல்களை அவரே சுமப்பார். ¹² ஆகையால், நான் உயர்ந்தோர் மத்தியில் அவருக்கு ஒரு பங்கைக் கொடுப்பேன்; அவர் பலவான்களுடன் கொள்ளைப்பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம் வாழ்வை மரணம்வரை ஊற்றி, குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். ஏனெனில் அவர் அநேகருடைய பாவங்களைச் சுமந்து, மீறுதல் உள்ளோருக்காக பரிந்துவேண்டுதல் செய்தார்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00