¹ ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார். ² இருளில் நடக்கும் மக்கள் ஒரு பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. ³ நீர் நாட்டைப் பெருகச்செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர். அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல, அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள். கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல, அவர்கள் மகிழ்கிறார்கள். ⁴ மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல, நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்த நுகத்தை உடைத்துப்போட்டீர். அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும், அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர். ⁵ ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும், இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக சுட்டெரிக்கப்படும். ⁶ ஏனெனில், “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார், நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார், அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும். அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன், நித்திய தகப்பன், சமாதானப்பிரபு” என அழைக்கப்படுவார். ⁷ அவருடைய ஆட்சியின் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும் முடிவே இராது. அவர் தாவீதின் சிங்காசனத்தையும் அவனது அரசையும் நிலைநாட்டுவார். இதுமுதற்கொண்டு அதை என்றென்றைக்கும் நீதியோடும் நேர்மையோடும் நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவார். எல்லாம் வல்ல யெகோவாவினுடைய வைராக்கியம் இதை நிறைவேற்றும்.
²⁶ ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை, ²⁷ ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். ²⁸ கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான். ²⁹ தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள். ³⁰ ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய். ³¹ நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். ³² அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். ³³ அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். ³⁴ அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள். ³⁵ அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார். ³⁶ உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன. ³⁷ இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான். ³⁸ அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00