¹ அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார். ² அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள். ³ இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். ⁴ அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. ⁵ சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும் ⁶ வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின. ⁷ வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன. ⁸ ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன. ⁹ கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
¹⁸ “ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்: ¹⁹ யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும். ²⁰ கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். ²¹ ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள். ²² முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். ²³ நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.”
⁴⁴ “பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான். ⁴⁵ “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது. ⁴⁶ பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00