¹ “நானே உண்மையான திராட்சைக்கொடி. என் பிதாவே தோட்டக்காரர். ² கனிகொடாத என்னிலுள்ள ஒவ்வொரு கிளையையும் அவர் தூக்கிவைக்கிறார். ஆனால், கனி கொடுக்கிற கிளைகளையோ அவர் கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார். அதனால் அவை இன்னும் அதிகமாய்க் கனிகொடுக்கும். ³ நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் ஏற்கெனவே சுத்திகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். ⁴ என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தன் சுயமாகவே கனி கொடுப்பதில்லை; அது திராட்சைக் கொடியிலே நிலைத்திருக்க வேண்டும். நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் உங்களால் கனிகொடுக்க இயலாது. ⁵ “நானே திராட்சைக்கொடி; நீங்களோ கிளைகள். நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் அதிகமாய் கனி கொடுப்பீர்கள்; என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவுமே செய்யமுடியாது. ⁶ நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால், நீங்கள் வெட்டி எறியப்பட்டு வாடிப்போகிற ஒரு கிளையைப்போல் இருப்பீர்கள்; அப்படிப்பட்ட கிளைகள் சேர்த்து எடுக்கப்பட்டு நெருப்பில்போட்டு எரிக்கப்படும். ⁷ நீங்கள் என்னில் நிலைத்திருந்து என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்குமானால், நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அது உங்களுக்குச் செய்யப்படும். ⁸ நீங்கள் அதிகமாய் கனிகொடுத்து, என்னுடைய சீடர்கள் எனக் காண்பியுங்கள். இதுவே என் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும். ⁹ “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். ¹⁰ நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறேன். அதுபோல் நீங்கள் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். ¹¹ என்னுடைய சந்தோஷம் உங்களில் இருக்கும்படியும், உங்களுடைய சந்தோஷம் முழுமை பெறும்படி இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ¹² நான் உங்களில் அன்புகூர்ந்தது போலவே, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்புகூரவேண்டுமென்பதே என் கட்டளை. ¹³ ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு யாரிடமும் இல்லை. ¹⁴ நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்தால், நீங்கள் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள். ¹⁵ நான் இனிமேலும் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லப்போவதில்லை. ஏனெனில் ஒரு வேலைக்காரன் தன் எஜமானுடைய வேலைகளை அறியமாட்டானே. நானோ உங்களை நண்பர்கள் என்றே சொல்கிறேன். ஏனெனில் என் பிதாவினிடத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். ¹⁶ நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன், நீங்கள் போய் நிலையான கனி கொடுக்கும்படி உங்களை நியமித்தேன். அப்பொழுது நீங்கள் என் பெயரில் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார். ¹⁷ ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். இதுவே என் கட்டளை.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00