¹ உங்கள் மத்தியில் சபைத்தலைவர்களாய் இருக்கிறவர்களிடம், உங்கள் உடன் தலைவனாகவும், கிறிஸ்துவினுடைய துன்பங்களுக்கு சாட்சியாகவும், வெளிப்படப்போகும் மகிமைக்கு பங்காளியாகவும் இருக்கிற நான் வேண்டிக்கொள்கிறதாவது: ² உங்களுடைய பராமரிப்பின்கீழ் இருக்கும், இறைவனுடைய மந்தைக்கு மேய்ப்பர்களாயிருங்கள். கண்காணிப்பாளர்களாகப் பணிசெய்யுங்கள். செய்யவேண்டியிருக்கிறதே என்பதற்காக செய்யாமல், நீங்கள் அப்படி இருக்கவேண்டுமென்று இறைவன் விரும்புகிறபடியால், மனவிருப்பத்துடன் அதைச் செய்யுங்கள்; பணம் சம்பாதிக்கும் பேராசையுடன் அதைச் செய்யாமல், வாஞ்சையுடன் அந்த ஊழியத்தைச் செய்யுங்கள். ³ உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களாய் இல்லாமல், மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள். ⁴ அப்படி நடப்பீர்களானால், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது, ஒருபோதும் மங்கிப்போகாத மகிமையின் கிரீடத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். ⁵ இளைஞர்களே, அந்தப்படியே நீங்களும் சபைத்தலைவர்களுக்கு அடங்கி நடங்கள். நீங்கள் எல்லோரும் மற்றவர்களுடன் பழகும்போது, மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கிறார்.” ⁶ ஆகவே, இறைவனுடைய வல்லமையான கரத்தின்கீழே உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது ஏற்றவேளையில், அவர் உங்களை உயர்த்துவார். ⁷ உங்கள் கவலைகளையெல்லாம் இறைவனிடத்தில் கொடுத்துவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். ⁸ தன்னடக்கம் உள்ளவர்களாயும் விழிப்புள்ளவர்களாயும் இருங்கள். உங்கள் பகைவனான பிசாசு கர்ஜிக்கின்ற சிங்கத்தைப்போல், யாரை விழுங்கலாம் என்று அலைந்து தேடித்திரிகிறான். ⁹ விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசை எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் உலகமெங்குமுள்ள உங்கள் சகோதர சகோதரிகளும் இதேவிதமான வேதனைகளின் வழியாக போய்க்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ¹⁰ எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். ¹¹ என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00