¹ யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: ² “மனுபுத்திரனே, இஸ்ரயேலின் மேய்ப்பர்களுக்கு விரோதமாக இறைவாக்கு உரை; நீ இறைவாக்குரைத்து அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: தங்களைக்குறித்து மட்டுமே கவனம் எடுக்கும் இஸ்ரயேலின் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு, மேய்ப்பர்கள் மந்தையில் கவனம் எடுக்க வேண்டுமல்லவோ? ³ நீங்கள் தயிரைச் சாப்பிட்டுக் கம்பளி உடைகளை உடுத்தி, சிறந்த மிருகங்களையும் அடித்துச் சாப்பிடுகிறீர்கள். ஆனால், மந்தையையோ நீங்கள் கவனிக்காது இருக்கிறீர்கள். ⁴ நீங்கள் பெலவீனமானவைகளைப் பெலப்படுத்தவில்லை. நோயுள்ளவைகளைச் சுகப்படுத்தவுமில்லை. காயமுற்றவைகளுக்குக் கட்டுப்போடவுமில்லை. நீங்கள் வழிவிலகிப் போனவைகளைத் திருப்பிக்கொண்டு வரவில்லை. காணாமற்போனவற்றைத் தேடிப்போகவுமில்லை. அவைகளைக் கடுமையாகவும், கொடுமையாகவும் நடத்தினீர்கள். ⁵ மேய்ப்பன் அங்கு இல்லாதபடியால் அவை சிதறிப்போயின. அவை சிதறியபோது காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின. ⁶ எனது செம்மறியாடுகள் எல்லா மலைகளிலும், ஒவ்வொரு உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின்மீதெங்கும் சிதறிப்போயின. அவைகளைத் தேடுவதற்கோ கவனிப்பதற்கோ ஒருவருமே இருக்கவில்லை. ⁷ “ ‘ஆகவே மேய்ப்பர்களே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ⁸ நான் வாழ்வது நிச்சயம்போலவே, என் மந்தைக்கு மேய்ப்பனொருவன் இல்லாத காரணத்தால் அவை களவாடப்பட்டன. அவை காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின. என் மேய்ப்பர்கள் என் மந்தையைத் தேடாமல் என் மந்தையைப் பார்க்கிலும் தங்களையே கவனிக்கிறார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ⁹ ஆகவே மேய்ப்பர்களே, யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள். ¹⁰ ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாயிருக்கிறேன். என் மந்தைக்கு அவர்களே கணக்குக் கொடுக்கவேண்டும். நான் அவர்களை மந்தை மேய்ப்பதினின்றும் விலக்கிவிடுவேன். மேய்ப்பர்கள் இனியொருபோதும் என் மந்தையைத் தங்களுக்கு உணவாக்க மாட்டார்கள். நான் அவர்கள் வாயினின்று என் மந்தையைத் தப்புவிப்பேன். அவை இனியொருபோதும் அவர்களுக்கு உணவாயிருக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். ¹¹ “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான், நானே எனது செம்மறியாடுகளைத் தேடி அவைகளைப் பராமரிப்பேன். ¹² ஒரு மேய்ப்பன் சிதறடிக்கப்பட்ட தன் மந்தைகளோடு இருக்கும்போது அவைகளைப் பராமரிப்பதைப்போலவே, என் செம்மறியாடுகளை நான் பராமரிப்பேன். மப்பும் மந்தாரமுமான நாளிலே, அவைகளைச் சிதறிப்போயிருந்த எல்லா இடங்களிலுமிருந்து நான் கூட்டிச்சேர்ப்பேன். ¹³ நான் அவைகளைப் பல நாடுகளிலும் நாடுகளிலுமிருந்து கூட்டிச்சேர்த்து, அவைகளுடைய சொந்த நாட்டிற்கே கொண்டுவருவேன். இஸ்ரயேலின் மலைகளின்மீதும், பள்ளத்தாக்குகளிலும் நாட்டின் எல்லா குடியிருப்புகளிலும் நான் அவைகளை மேய்ப்பேன். ¹⁴ நல்ல பசும் புற்தரைகளிலே நான் அவைகளைப் பராமரிப்பேன். இஸ்ரயேல் மலை உச்சிகள் அவைகளின் மேய்ச்சல் நிலங்களாயிருக்கும். அங்கே நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும். இஸ்ரயேல் மலைகளின் செழிப்பான பசும்புற்தரையில் அவை மேயும். ¹⁵ என் செம்மறியாடுகளை நானே பராமரித்து அவைகளை இளைப்பாறச் செய்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ¹⁶ தொலைந்து போனவற்றை நான் தேடி, வழிதப்பிப்போனவற்றைத் திருப்பிக் கொண்டுவருவேன். காயம்பட்டவற்றை நான் கட்டி, பெலவீனமானதைப் பெலப்படுத்துவேன். ஆனால் கொழுத்ததையும் பெலமுள்ளதையும் நான் அழித்துப்போடுவேன். நான் நீதியின்படியே மந்தையை மேய்ப்பேன்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00