¹ இயேசு மேலும் சொன்னதாவது: “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத் தொழுவத்தினுள்ளே ஒருவன் வாசல் வழியாய் உள்ளே போகாமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வருகிறவன், அவன் கள்வனும் கொள்ளைக்காரனுமாய் இருப்பான். ² வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான். ³ காவலாளி அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். ஆடுகளும் அவனுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வழிநடத்திச் செல்கிறான். ⁴ அவன் தனக்குச் சொந்தமான எல்லா ஆடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டபின்பு, அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய ஆடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப்பின் செல்கின்றன. ⁵ ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார். ⁶ இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. ⁷ எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஆடுகளுக்கு வாசல் நானே. ⁸ எனக்கு முன்னே வந்த எல்லோரும் கள்வரும் கொள்ளைக்காரருமாய் இருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. ⁹ நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகிறவர்கள் யாரோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாய் உள்ளே வந்து வெளியே போய், தமக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்கிறார்கள். ¹⁰ திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான்; நானோ அவர்கள் ஜீவனை அடையும்படியாக வந்திருக்கிறேன். அவர்கள் அந்த ஜீவனை நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவே வந்தேன். ¹¹ “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான். ¹² கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது. ¹³ கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான். ¹⁴ “நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன. ¹⁵ பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன். ¹⁶ இந்தத் தொழுவத்திற்குள் இராத வேறு ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும். ¹⁷ நான் என் உயிரைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக் கொள்வேன். ¹⁸ என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்றார்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00