¹⁹ எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே: ²⁰ “நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான். ²¹ அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான். ²² இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள். ²³ யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான். ²⁴ பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர் ²⁵ யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். ²⁶ யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள். ²⁷ அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான். ²⁸ இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ²⁹ மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர். ³⁰ ‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன். ³¹ நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான். ³² பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன். ³³ தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார். ³⁴ இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான். ³⁵ மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். ³⁶ இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான். ³⁷ அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
²⁶ யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடத்தில் போய்க்கொண்டிருக்கிறார்களே” என்றார்கள். ²⁷ யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ²⁸ ‘நான் கிறிஸ்து அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள். ²⁹ மணவாளனுக்கே மணப்பெண் உரியவள். மணவாளனின் தோழனோ, மணவாளனின் அருகே நின்று அவன் சொல்வதைக் கேட்கிறான். அவன் மணவாளனுடைய குரலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அந்த மகிழ்ச்சியே எனக்குரியது. அது இப்போது நிறைவடைந்தது. ³⁰ அவரோ மிகுதிப்பட வேண்டும்; நானோ குறைந்துபோக வேண்டும்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00