¹⁶ எனினும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்பொழுது நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ, கேடு வரும். ¹⁷ நான் பிரசங்கிப்பதை ஒரு தொண்டாக செய்வேனாயின், எனக்கு அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பம் இன்றி நான் இதைச் செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன். ¹⁸ அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராமலும், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதில் கிடைக்கும் மனத்திருப்தியே எனக்குரிய வெகுமதி. ¹⁹ நான் சுதந்திரமான மனிதன். எந்த ஒரு மனிதனுக்கும் என்மேல் உரிமையில்லாதிருந்தும், அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக ஆதாயப்படுத்திக்கொள்ள, எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக்கொள்கிறேன். ²⁰ யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் யூதருக்கு யூதனைப் போலானேன். மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, நானும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். அவ்வாறே, நான் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படாதவனைப் போலானேன். ²¹ மோசேயின் சட்டம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள, நானும் மோசேயின் சட்டம் இல்லாதவன் போலானேன். ஆனால் நான் இறைவனுடைய சட்டத்திற்கு உட்படாதவனல்ல, நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவன். ²² பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ள, நான் பலவீனருக்கு பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது இரட்சிப்புக்குள் வழிநடத்தும்படி, நான் எல்லோருக்கும் எல்லாமானேன். ²³ நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் பங்கு பெறும்படியாகவே நற்செய்தியின் நிமித்தமே இவை எல்லாவற்றையும் நான் செய்கிறேன். ²⁴ ஓட்டப் பந்தயத்தில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். இது உங்களுக்குத் தெரியாதா? பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள். ²⁵ விளையாட்டுக்களில் பங்குபெறும் ஒவ்வொருவரும், கடுமையான சுயக்கட்டுப்பாடு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அழிந்துபோகும் ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு செய்கிறார்கள்; ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கிறோம். ²⁶ ஆதலால், நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப்போல ஓடமாட்டேன்; நான் காற்றில் குத்துகிற மனிதனைப்போல, குத்துச் சண்டையிடமாட்டேன். ²⁷ நான் என் உடலை அடக்கி, எனக்கு அடிமையாக்கிக்கொள்கிறேன். ஏனெனில் நான் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபின், அதன் பரிசுக்குத் தகுதியில்லாதவனாய் விழுந்துபோகாதபடி இப்படிச் செய்கிறேன்.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™, ஆடியோ பதிப்பு பதிப்புரிமை ℗ 2024 Biblica, Inc. மற்றும் Davar Partners International Biblica® Open Indian Tamil Contemporary Version™, Audio Edition Copyright ℗ 2024 Biblica, Inc. and Davar Partners International Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 Biblica, Inc.
0:00
0:00